சென்னை: சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சூரியம்பேட்டை பகுதியில் நேற்று (பிப். 9) சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் தீக்காயமடைந்த 5 பேர் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (பிப். 11) நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீக்காயம் அடைந்தவர்களில் 3 ஆண்கள், 2 பெண்கள் அடங்கும். இவர்களில் 2 பேருக்கு 70 சதவீதம் பாதிப்பும், 2 பேருக்கு 40 சதவீதம் பாதிப்பும், ஒருவருக்கு 32 சதவீதம் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. 70 சதவீதம் பாதிப்புள்ளவர்களுக்கு இணை நோய் பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
எந்த நிறுவனத்தில் சிலிண்டர் பெறப்பட்டது முறையாக பராமரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை. 45 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2019ஆம் ஆண்டு பணிகளை மத்திய அரசு தொடங்கியது.
222.47 ஏக்கர் நிலம் அன்றைக்கே தரப்பட்டு விட்டது. அதனை சுற்றிலும் சுற்றுசுவர் அமைத்துள்ளார்கள். நிலம் பிரச்சனை இல்லை. நிதி பிரச்சனை மட்டும் தான் உள்ளது. திமுக அரசு அமைந்த பிறகு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சராகிய நானும் செயலாளரும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வலியுறுத்தி வருகிறேன். மத்திய அரசிடம் எப்போது பணிகள் தொடங்கும் என்று கேட்டோம். 2024 இறுதியிலேயே மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் 2028ஆம் ஆண்டு தான் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தனர். இதுதான் மதுரை எய்ம்ஸ் உண்மை நிலவரம்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசிடம் இருந்து மிக விரைவில் பதில் அனுப்பப்படும். அகில இந்திய கோட்டாவில் 6 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது. இது தொடர்பாக எழுத்து பூர்வமாகவும் நேரில் சந்தித்து கோரினோம். அதற்கும் பதில் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200 நாளாக போராட்டம்.. விவசாயிகளை சந்திக்க சென்ற வெற்றிச்செல்வன் கைது.. அரசியல் தலைவர்கள் கண்டனம்..