மதுரை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பட்டியலின மக்களுக்கு இலவச பஞ்சமி நிலங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்டன. இந்தப் பஞ்சமி நிலங்கள் பட்டியலின சமுதாய மக்களை முன்னேறுவதற்காக வழங்கப்பட்டது. அவர்கள், விவசாயம் அல்லது தொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வழங்கப்பட்டது. ஆனால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக தங்கள் பெயர்களுக்கு நிலங்களை பெயர் மாற்றம் செய்து கொள்கின்றனர். இது சட்டவிரோத செயலாகும்.
மேலும், சில பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு பட்டியலின மக்களின் வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு, வாரிசுத்தாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பஞ்சமி நிலங்கள் வேறு சமுதாய மக்கள் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள 82 ஏக்கர் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க அரசு அலுவலர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்குக' - தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்