மதுரை: மதுரையை சேர்ந்த கண்மணி, கீதா முத்துலட்சுமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. இந்த குரூப் 4 தேர்வுக்கு நாங்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கான அனுமதிசீட்டு பெற்று தேர்வு எழுதினோம். மொத்தம் 10,117 பணியிடங்களுக்குகுரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. இந்த தேர்வை பொறுத்தவரை நாங்கள் 255 மதிப்பெண்கள் மேல் பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வில் விடைத்தாள்(ஓஎம்ஆர்) மோசடியும், குழப்பமும் நடைபெற்று உள்ளதாக தெரிகிறது. எனவே என்னுடைய வினாத்தாளை(ஓஎம்ஆர்) எங்களுக்கு வழங்க வேண்டும், என கடந்த மாதம் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தோம். அதன்படி இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரர்களாகிய எங்களுக்கு விடை தாள் நகல் வழங்கப்பட்டது.
இதில் மனுதாரராகிய ஸ்ரீ கண்மணி ஆகிய நான், ஆய்வு செய்து பார்த்த போது, அதிர்ச்சியாக இருந்தது.TNPSC இறுதி விடை தாள் மற்றும் எனது OMR தாள் விடைகளின் நகல் ஆகியவற்றைச் சரிபார்த்த பிறகு, 169 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து உள்ளேன். மொத்தம் 253.50 மதிப்பெண்கள் எனக்கு வருகிறது. ஆனால் , முதலில் TNPSC. வெளியிட்ட முடிவுகளின்படி நான் கட்டாயத் தமிழ்த் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை நான் 150க்கு 43.50 மட்டுமே பெற்றேன், ஏனெனில் தகுதியான குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் நான் பெறவில்லை என கூறப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில், கட்டாயத் தமிழ் தகுதி தேர்வில் 150-க்கு 142.50 மதிப்பெண்கள் எனக்கு வருகிறது.
எனது OMR நகலைப் பெற்ற பிறகு, எனது முடிவுகள் கிட்டத்தட்ட 5 முறை சரிபார்த்தேன், 253.50 மதிப்பெண்கள் வருகிறது. ஆனால் TNPSC எனது முடிவை தவறாக வெளியிட்டு உள்ளது நான் பணி நியமன பட்டியலில் இல்லை. இதே போல் சக மனுதாரர்களாகிய கீதா, முத்து லெட்சுமி ஆகியோருக்கும் அதிக மதிப்பெண் வருகிறது. பணி நியமனம் பெற தேவையான மதிப்பெண் எங்களுக்கு உள்ளது. எனவே நாங்கள் பதில் அளித்த விடை தாளையும் , இறுதி விடை பட்டியலை ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்க வேண்டும்.எங்களுக்கும் குரூப் 4 பணி வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறி உள்ளனர்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இதற்கு தான் இறுதி விடை தாள் பட்டியல் வெளியிடாமல் தாமதித்தீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுதாரர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண் குறித்து ஒப்பிட்டு ஆய்வு செய்து உரிய பதில் அளிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ 22 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அரசு பேருந்தில் போலி டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட நடத்துநர் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?