மதுரை: திருநெல்வேலி வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவநாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் மனுவில், "எனது மகன் முத்து மனோ களக்காடு காவல்துறையினரால் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி என் மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தவும், தொடக்க கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இரண்டு கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்." என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, வழக்கை சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. அதோடு மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிறை காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இறந்து போன முத்து மனோவின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று(ஜூன்.30) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து திருநெல்வேலி காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் தரப்பில் முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கரோனா தொற்று நேரத்தில் 15 நபர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மனுதாரர் தரப்பில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றம் செய்தபிறகு உடலை வாங்குவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், ஜூலை 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குள் முத்து மனோவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மாலை 7 மணிக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்க வேண்டும். உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்ட பின்பு மனுதாரரின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்பு