மதுரை: மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று அதிக காளைகளைப் பிடித்ததாக விழா குழுவினர் அறிவித்தனர்.
இதே போல் இந்த போட்டியில் இரண்டாம் பரிசாக அறிவிக்கப்பட்ட கருப்பண்ணன் என்பவர் பனியன்களை மாற்றி முறைகேடாக வெற்றி பெற்றதாகவும் கூறி அவருக்கு முதல் பரிசு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பனியன்கள் மாற்றிய விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பனியன்களை மாற்றிய விவகாரம் உண்மைதான் ஆனாலும் இரண்டாம் பரிசாக அறிவித்த கருப்பணனை விட கண்ணன் அதிக காளைகளைப் பிடித்தது உண்மைதான் என தெரிவித்தனர்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி விழா குழுவினர் அறிவித்தது போல் பரிசு தொகுப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தார். இதன் அடிப்படையில் நான்(கண்ணன்) மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற கருப்பணன் விழா கமிட்டியிடம் பரிசுகளை வழங்க வேண்டி மனுவினை விண்ணப்பித்தோம்.
ஆனால், இதுவரையிலும் எனக்கு முதல் பரிசான காரினை வழங்கவில்லை. இதுகுறித்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் எந்தவித பதிலும் அனுப்பவில்லை. எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்து உத்தரவில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு ஜாமீனுடன் கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Men's Only ஆண்கள் மட்டுமே பங்கேற்ற மணக்கும் மதுரை கறி விருந்து!