தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என மக்களிடையே பிரபலமானர்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நிதி நிறுவன அலுவலக முகவராகச் செயல்பட்ட வெங்கடேச சாஸ்திரி பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிதி நிறுவன வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வெங்கடேச சாஸ்திரி என்பவர் நிதி நிறுவனத்தில் பிறரிடம் நிதி திரட்டும் முகவராகச் செயல்பட்டுள்ளார்.
இவர் மீது 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது வெங்கடேச சாஸ்திரியைப் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டுவருவதால் அவருக்குப் பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் ஏற்கனவே ஒரு வழக்கில் பிணை பெற்று உள்ளதால் மற்ற வழக்குகளிலும் பிணை வழங்க வேண்டும் என வேண்டுகோள்வைத்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரருக்கு மற்ற வழக்குகளில் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான மருத்துவ சேர்க்கை: உயர் நீதிமன்றம் புது உத்தரவு