மதுரையைச் சேர்ந்த முருக கணேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள காவலரை தனிப்படை விசாரணை பணி என ஒதுக்குகின்றனர். இதனால் காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாமல் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுகிறது.
மேலும் காவலர்கள் தனிப்படை மற்றும் சட்ட ஒழுங்கு என இரு பணிகளை மேற்கொள்வதால், ஓய்வெடுக்கக்கூட நேரமின்றி மன உளைச்சலில் உள்ளனர். இதனால், காவலர்கள் விசாரணைக்காக வரும் பொதுமக்களைக் கடுமையாகத் தாக்குகின்றனர். இதற்கு உதாரணமாக சாத்தான்குளம் காவல் நிலைய வழக்கு உள்ளது.
மதுரையில் 22 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும் 16 குற்றப்பிரிவு காவல் நிலையங்களும் உள்ளன. இவற்றில் 1025 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் போதிய காவலர்கள் பணியில் இல்லை. இதுபோல ஒரு காவல் நிலையத்தில் 30 பேர் பணியில் இருந்தால் பாதிக்கும் மேற்பட்டோர் தனிப்படை பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதன் காரணமாக மீதமுள்ள காவலர்களுக்குப் போதிய விடுமுறை, ஓய்வோ வழங்கப்படுவதில்லை. இதனால், மன உளைச்சலில் உள்ள காவலர்கள் விசாரணைக்காக வருபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதுடன் கடுமையாகத் தாக்கவும் செய்கின்றனர்.
எனவே காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்களைத் தனிப்படை விசாரணைக்கு என ஒதுக்குவதை விட்டுவிட்டு இதற்கென தனியாக விதிகளை உருவாக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும், வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து விரிவான விசாரணைக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மனுதாரர்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து