மதுரை கீரைத் துறையில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை 56ஆவது வட்ட மதிமுக செயலாளர் முருகன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார். இதில் உறவினர்கள், மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை வைத்து மொழி பெயர்க்கலாம் என்று கூறியது வரவேற்புக்குரியது. ஆனால் அந்த குறிப்பிட்ட மொழிகளில் தமிழ் மொழி இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகிலேயே முதல் மொழியாம் தமிழ் மொழி, மூத்த மொழி இடம்பெறாமல் இருப்பது மிகவும் வேதனையும், கவலையும் அளிக்கிறது.
ஹைட்ரோகார்பன் பற்றி கூறுகையில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் வாயு எடுக்க மாநில அரசு என்னதான் தடுக்க திட்டம் போட்டாலும் அது எடுபடாது மத்திய அரசு அதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மீத்தேன் வாயு எடுப்பதன் மூலம் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் வாழ்வதற்கான எந்த ஒரு அறிகுறியும் இருக்காது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தாமல் இருப்பதற்கு காரணம் அங்கு ஏராளமான நட்சத்திர விடுதிகள் பெரிய நிறுவனங்கள் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் இந்த நிறுவனங்கள் எல்லாம் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என்ற காரணத்தினாலேயே கேரள அரசு உயர்த்த மறுக்கிறது. மேலும் கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒருபோதும் மதிக்காது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கேரள அரசு சட்டப்பேரவையில் ஒரு தனி தீர்மானம் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காது. இதுதான் தமிழ்நாட்டிற்கு உரிய விபரீதமான நிலை என்று கூறினார்.