கரூர்: சாதிய வன்கொடுமை தடையை உடைத்தெறியக் களத்தில் இறங்கிப் போராடிய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, வழிபாடுகள் செய்யும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக ஜூன் 7ம் தேதி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்ற போது, பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த முயன்ற சக்திவேல் என்ற இளைஞர் மாற்றுச் சமூகத்தினரால் வெளியேற்றப்பட்டார். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த மற்றொரு தரப்பினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
வருவாய்த் துறையினர் அனைத்து தரப்பினரும் கோயிலில் வழிபட வேண்டும் எனப் பேச்சுவார்த்தை மூலம் வலியுறுத்தினார். ஆனால் காளியம்மன் கோயில் திருவிழாவிற்காக முன்தினம் கரகம் பாலத்தில் நிகழ்ச்சி நடைபெற்று கரகம் கோயிலுக்குள் இருந்தது. அதனை மாற்றுச் சமூகத்தினர் திடீரென கோயிலுக்குள் சென்று எடுத்து, அங்குள்ள கோயில் கிணற்றில் கரைத்தனர். மேலும் கோயிலுக்குப் பூட்டுப் போட்டுப் பூட்டினார்.
குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் புஷ்பா தேவி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் பொழுது மாற்றுச் சமூகத்தினர் கோயில் கரகத்தை எடுத்துச் சென்று திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியை நடத்தி முடித்ததுடன், கோயிலுக்குப் பூட்டும் போட்டதால், கோயிலுக்கு வருவாய்த் துறை சார்பில், குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் புஷ்பா தேவி சீல் வைத்தார். அப்போது காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது மண்களை வாரித் தூவி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டித்து காளியம்மனுக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த குறிப்பிட்ட சமூகத்தினர், பொது சாலைகளில் மரங்களை வெட்டி சாய்த்தும், காவல்துறையினர் அரசு அதிகாரிகளை ஊருக்குள் வரவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அன்று பொறுப்பிலிருந்த குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் புஷ்பாதேவி கோயிலைப் பூட்டி சீல் வைத்த நிலையில் மூன்று, கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது . ஆனால் மாற்றுச் சமூகத்தினர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயக்கம் காட்டினார். இதனால் கிராம மக்கள் அவர்களின் ஒத்துழைப்பைக் கொடுக்க மறுத்ததால் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அதிரடியாக முடிவெடுத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவரது தலைமையில் கோயிலைத் திறந்து, பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்லப்படு வழிபாடு நடத்தும் நிகழ்வு இன்று(ஜூன் 21) காலை 11.30 மணி அளவில் நடைபெறும் என இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் ஷோபா, கடவூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கோயில் முன்பு கூடினர். இதற்காக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள் அதிவிரைவு படை போலீசார் என 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னதாக, காளியம்மன் கோயில் பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பட்டியிலன மக்கள் வழிபாடு நடத்துவதற்காகப் பட்டியலின மக்கள் குளித்தலை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மாற்றூ சமூகத்தினர் அனைவரது முன்னிலையில் காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் உடைக்கப்பட்ட நிலையில் மற்றொரு தரப்பினர் கோயிலை பூட்டப்பட்ட பூட்டுக்கான சாவியை அரசு அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் பூட்டு உடைக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காளியம்மன் கோயிலுக்குச் சிறப்புப் பூஜை அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் பூசாரி தீபாராதனை வழங்கி விபூதி வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், "வீரணம்பட்டி காளியம்மன் கோயில் பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அசாதாரண சூழல் களையப்பட்டு, இருதரப்பினரும் கோயிலில் ஒற்றுமையாக வழிபாடு செய்ய ஏதுவாக இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளது .
பேச்சுவார்த்தையின் போது பட்டியலின மக்கள் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுப் பிற ஊர்களுக்கு முன்மாதிரியாகவும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஒற்றுமையைப் பேணிக்காக்கும் வகையிலும் கோயிலில் இன்று பொது வழிபாடு நடத்தப்பட்டது . மேலும் இதுபோன்று சுமூகமான சூழலை ஊக்குவிக்கும் வகையில் மேலப்பகுதி ஊராட்சிக்கு அரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய், தெரு விளக்குகள், சிமெண்ட் சாலைகள், ஓரடுக்கு கம்பி சாலைகள் என மேற்கொள்ளப்பட உள்ளது” என தெரிவித்தார்.
மேலும் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் அனைத்து திறப்பு மக்களும் ஒருமனதாக அம்மனை வழிபடுவதற்கு, நீடித்த ஒற்றுமைக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 1.5கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முன்முயற்சியையே பாராட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதீ ஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்கிறது” என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பொது வழிபாட்டு உரிமையை உறுதி செய்ததற்கு கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கரூர் மாவட்ட பொருளாளர் அவிநாசி மற்றும் தலித்து விடுதலையை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, ஆதித்தமிழர் பேரவை கரூர் மாவட்ட செயலாளர் பசுவை பாரதி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் இரு தரப்புக்கும் கோயிலில் பொது வழிபாடு நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில், மற்றொரு தரப்பினர் புறக்கணித்து அதிருப்தியே வெளிப்படுத்தியுள்ளனர்.
கடவூர் சுற்றுவட்டாரத்தில் எட்டு கிராம குடிப்பாட்டு மக்கள் கலந்து பேசி ஒருமித்த கருத்து முயற்சித்து வருவதாக தெரிவித்தனர். கோவில் வழிபாடு நிகழ்ச்சிக்குப் பிறகு, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பட்டியலின மக்களளை அழைத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் . அமைதியாக, இனி கோயில் திருவிழாவை கொண்டாட வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். படித்து கலெக்டர், தாசில்தார், நீதிபதி என பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கிச் சென்றார்.
இதையும் படிங்க: TN Next DGP: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?