மதுரை: இந்திய கடற்படையால் தாக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர் வீரவேலின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளதாக சிடி ஸ்கேனில் தெரியவந்துள்ளது என்றும். தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மீனவரின் வயிறு மற்றும் தொடைப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளன என அமைச்சர் கூறினார்.
மேலும் அமைச்சர் அளித்த தகவலில், காரைக்கால் பகுதியிலிருந்து 10 மீனவர்கள் படகில் சென்றுள்ளனர். இவர்களில் மூவர் காரைக்கால், ஒருவர் நாகப்பட்டினம், ஆறு பேர் மயிலாடுதுறையையும் சேர்ந்தவர்களாவர். தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நமது மீனவர்களை நமது நாட்டு கடற்படை வீரர்களே துப்பாக்கியால் சுட்டது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும் என அமைச்சர் கூறினார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் வலியுறுத்துதல்களின் மூலம் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கடற்படையால் நடந்த இந்த நிகழ்வு வேதனைக்குரியது. இதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார்.