மதுரை: மேலூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016-ல் தாக்கல் செய்த மனுவில்,"மதுரை நகரின் முக்கிய நீராதாரமாக தல்லாகுளம் கண்மாய் உள்ளது. 52 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கண்மாயில் வணிக வரித்துறை அலுவலகம், சட்டக்கல்லூரி, டிஇஓ மற்றும் மாநகராட்சி அலுவலகம் என படிப்படியாக அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன. மேலும் தல்லாகுளம் கண்மாய் பகுதியில் 14.15 ஏக்கர் பரப்பளவில் உலக தமிழ்ச் சங்கத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியாக தல்லாகுளம் கண்மாய் அறிவிக்கப்படவில்லை. எனவே, தல்லாகுளம் கண்மாயில் உள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்றிவிட்டு, பழைய நிலைக்குக் கொண்டு வரவும், புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ’நீர்நிலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது என்பதில் இருவேறு கருத்து இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கட்டடங்கள் உள்ளன. இதில், அரசு அலுவலகங்களும் உள்ளன.
தற்போதைய நிலையில் கண்மாயை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென்பது அவ்வளவு சாத்தியம் இல்லை. இனிமேல் தற்போதுள்ள கட்டடங்களைத் தவிர்த்து, இனி எந்தவிதமான ஆக்கிரமிப்பிற்கும் நிலம் எடுக்கப்படாது என அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை’ என்பதால் இந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருவிழாக்களில் ஆபாச நடனம்; டிஜிபி விளக்கமளிக்க உத்தரவு