மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வர்த்தகப் பிரிவும் இணைந்து, அமெரிக்காவுடன் தொழில் வணிகம் செய்வது எப்படி என்ற தலைப்பில் ஓர் கலந்தாய்வுக் கூட்டம், சங்கத் தலைவர் டாக்டர் N. ஜெகதீசன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புரையாற்றிய முனைவர் என்.ஜெகதீசன், “சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக வர்த்தகப்பிரிவு அதிகாரிகளுடன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பல ஆண்டுகளாக நல்லுறவு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், 2013ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு தொழில், வணிகம் சார்ந்த 45 வணிகப் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் தூதுக் குழுவினை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பல்வேறு வணிக வாய்ப்புகளை அறிந்து வந்தனர்.
அத்துடன் இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளை உறுதிபடுத்திடும் வகையில், இந்திய - அமெரிக்க தொழில் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மேற்கொண்டது. மேலும், இந்தியா - அமெரிக்கா வணிகப் பொருட்களின் இருதரப்பு வர்த்தகம் கடந்த 2022ஆம் ஆண்டில் 123.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், அது நடப்பு ஆண்டில் 128.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மென்மேலும் வளர்ச்சி பெறும். இந்தியாவிலிருந்து தோல் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உறைந்த இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள், ஜவுளி, ரத்தினங்கள், உலோகங்கள், விவசாய இயந்திரங்கள், இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் அமெரிக்காவுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
பின்னர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை அமெரிக்க தூதரகத்தின் முதன்மை வர்த்தகப் பிரிவு அதிகாரி கேரி அருண் பேசுகையில், “தமிழகத்தில் தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர், அமெரிக்காவில் பல்வேறு தொழில் வணிகங்களில் முதலீடு செய்து அங்கிருந்தவாறே வணிகத்தை மேம்படுத்த மற்றும் விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில், எம்மாதிரி தொழில்களில் முதலீடுகள் செய்து உற்பத்தியைப் பெருக்கி லாபம் ஈட்டுவதற்கான ஆலோசனைகள், அப்பகுதிகளில் உடனடியாகத் தொழிலை தொடங்கி நடத்துவதற்கான எளிதான நடைமுறைகளுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும், ஏற்கனவே அமெரிக்காவில் தொழில் வணிகத் துறையில் முதலீடு செய்து, தொழில் நடத்தி வருபவர்களுக்கான உதவிகளையும் செய்திட சென்னை அமெரிக்க தூதரக வர்த்தகப் பிரிவு தயாராக உள்ளது” எனக் கூறினார்.
மேலும் அவர், வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23, 24-ஆம் தேதிகளில், அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் இணைந்து, மிகப் பிரமாண்டமாக நடத்த உள்ள தொழில் வர்த்தகத் துறை முதலீட்டாளர்களின் உச்சி மாநாடு குறித்து விரிவாக எடுத்துக் கூறியதோடு, அதில் பங்கேற்கும் தொழில் வணிகர்கள், ஏற்றுமதி அல்லது இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பயன் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, தென் தமிழகத்தில் உள்ள தொழில் வணிகப் பிரதிநிதிகள் அதிகளவில் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் இக்கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுத்தார்.
மேலும், அமெரிக்காவில் தொழிலை எளிதாகத் தொடங்கி சிறப்பாக நடத்துவது குறித்த பல்வேறு பயனுள்ள தகவல்கள், அமெரிக்க தூதரக வர்த்தகப் பிரிவு இணையதளத்தில் உள்ளதைக் குறிப்பிட்டு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் இதனை பயன்படுத்தி தங்களது வணிகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார். இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தொழில், வணிகப் பெருமக்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கமும் அளித்தார்.
இந்நிகழ்வில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக வர்த்தகப் பிரிவு முதுநிலை அலுவலர் மாலா வெங்கட், வர்த்தக சங்க நிர்வாகிகள் செயலாளர் J. செல்வம், துணைத் தலைவர்கள் பா. ரமேஷ், G. இளங்கோவன், D.S. ஜீயர் பாபு, பொருளாளர் S. ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது" - மீனவர்கள் குற்றச்சாட்டு!