கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சூறைகாற்று, இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மதுரை அரசு இராசாசி மருத்தவமனையில் மின் தடை ஏற்பட்டபோது அங்கு சிகிச்சையில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் செயற்கை சுவாசம் செயல்படாத காரணத்தால் உயிரிழந்ததாக உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனை முன்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்னர். பின்னர் இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா, சுவாசக் கருவி இயங்காததால், யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர்கள் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாகவும் விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த இராசாசி மருத்துமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர்கள் செயற்கை சுவாச முகமூடிகளை அணிந்தவாறு வந்து மனுவை அளித்தனர்.
பின்னர் அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வா செய்தியாளர்களை சந்தித்தபோது,
'அரசு இராசாசி மருத்துவமனையில் மின்துறை ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்படாததால் ஐந்து நோயாளிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். அவர்களின் அலட்சியப்போக்கு இந்த சம்பவத்திற்கு காரணம் என்பதால் கல்லூரி முதல்வரும் உள்ளிட்ட பலரும் இந்தச் செய்தியை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
எனவே இந்த விவகாரத்தில் உயர்மட்டக் குழு விசாரணையை ஏற்படுத்தி விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். வளாகத்தில் எப்போதும் மின்சாரம் வழங்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என அவர் தெரிவித்தார்.