மதுரை மாவட்டம் மேலூர் நகைக்கடை தெரு பகுதியில் திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1915 ஆம் ஆண்டு இக்கோயிலிலிருந்த இரண்டு அடி நீளமுள்ள அம்மன் சிலை மாயமானது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான அன்றே கோயில் சார்பாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது கோயிலில் நாரயணமூர்த்தி, கந்தசாமி ஆகியோர் பூசாரியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில், சில மாதங்களுக்கு முன்பு மதுரையிலுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு மாயமான சிலையை மீட்கக் கோரி மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையிலான குழுவினர் கோயில் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தபோது பூசாரியாக பணியாற்றிய கந்தசாமி வீட்டிலிருந்து சுமார் இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னிலான அம்மன் சிலை சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், மறைந்துபோனதாக கூறப்பட்ட சிலை தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.