சமயநல்லூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காசி, ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “வழக்கின் தன்மையைப் பொருத்து 60 அல்லது 90 நாள்களில் விசாரணையை முடிக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட நாளில் விசாரணையை முடிக்காவிட்டால் கைது செய்யப்பட்டவர்களை ஜாமினில் விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஜாமின் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் வீடியோ கான்பரன்ஸிங்கில் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில், "சிலை திருட்டு வழக்கில் மனுதாரர் உட்பட 7 பேருக்கு தொடர்புள்ளது. இதில் மனுதாரர் உட்பட 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தலைமைறைவாக உள்ளனர். 3 சிலைகள் திருடப்பட்டதில், ஒரு சிலை மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மனுதாரர் மீது பல வழக்குகள் உள்ளன. ஊரடங்கால் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கவில்லை. ஆகவே, ஜாமின் வழங்கக்கூடாது" என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ”குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணை முடியாதது காவல் துறையினரின் தவறல்ல. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இதைக் காரணமாக வைத்து மனுதாரர் ஜாமின் கேட்க முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.