மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு ஜெயந்தி விழா 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது காந்தியின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக, காந்தியடிகளின் தனிப்பட்ட உதவியாளரும், காந்தி சுடப்பட்டபோது அருகிலிருந்தவருமான வி.கல்யாணத்தை ஈடிவி பாரத் சார்பில் சந்தித்து உரையாடினோம். அப்போது அவர் காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, "காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து விட வேண்டும் என்பது விதி. எழுந்தவுடன் பிரார்த்தனை நடைபெறும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரார்த்தனையாக நடைபெற்றது. பிறகு ஐந்து மணியளவில் தனக்கு வந்திருக்கும் கடிதங்களை வாசிக்கச் சொல்லி என்னிடம் டிக்டேட் செய்வார். அவர் மிக மென்மையாகச் சொல்வார். அதனை எழுதி முடித்தபிறகு, அவற்றைத் திருத்துவார். எந்த இடத்தில் திருத்தியிருக்கிறார் என்பதைப் பார்த்து நாம் திருத்திக் கொள்ள வேண்டும். யாரையும் கோபித்துக் கொள்ளமாட்டார். கடிந்து பேச மாட்டார். அது அவரது கொள்கைக்கு விரோதமாக நினைப்பார்.
பிறகு அவரைச் சந்திக்கக் காத்திருக்கும் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடுவார். இந்தியாவில் வாழும் ஏழை மக்களின் நலன்கள் குறித்ததாகவே அவரது சிந்தனையும் பேச்சும் செயலும் இருக்கும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் மௌனவிரதம் கடைப்பிடிப்பார். அந்த சமயம் யாருடனும் பேசமாட்டார்' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "காந்தியைக் கொல்வதற்கு ஆறு முறை முயற்சிகள் நடைபெற்றன. 1931, 1936, 1942, 1944-ஆம் ஆண்டுகளில் காந்தியைக் கொல்ல நடைபெற்ற முயற்சிகளின்போது பிரிட்டீஷார் ஆட்சியிலிருந்தனர். அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை விடுதலை இந்தியாவில் வெறும் ஐந்தரை மாதங்களில் இழந்தோம். அப்போது நம்மால் கொடுக்க முடியாத நல்லாட்சியை, இன்று வரை கொடுக்க முடியவில்லை. அந்த வெள்ளைக்காரன் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும்.
நீங்கள் தவறு செய்தீர்களென்றால் உடனடியாக தண்டனை கிடைக்கும் எனும் நிலை வெள்ளையர் ஆட்சியில் இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சியின் போது லஞ்சம் ஊழலுக்கு ஒருபோதும் இடமில்லை. நம்மைக் கொள்ளைடித்தார்கள் என்பது வேறு. ஆனால், அலுவலகத்தில் வேலை செய்யும் கிம்பளம் வாங்கும் பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை. நேரு காலத்தில்தான் இந்தியாவில் ஊழல் நடைமுறை தொடங்கியது. வெள்ளையர் ஆட்சி நடைமுறை, நிர்வாகத் திறமை குறித்து காந்தியே பலமுறை பாராட்டியிருக்கிறார்.
காந்தியை சுத்தமாக மறந்துவிட்ட தேசத்தில் காந்திக்கான தேவை எப்படி இருக்கும்? காந்தியை இப்போதும் மதிப்பவர்கள் வெள்ளையர்கள் மட்டுமே. தெய்வத்தைப் போன்று வணங்குகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளானாலும் இன்னொரு காந்தி நமக்கு கிடைக்கமாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் நடைபெற்ற முதல் இரண்டு தேர்தல்களில் காந்தியின் பெயரைச் சொல்லி வாக்குகள் வாங்கினார்கள். இப்போது அப்படியில்லையெனும்போது காந்தியை மறந்துவிட்டார்கள் என்பதுதானே பொருள்.
இன்றைக்கு வெள்ளையர்கள் ஆட்சி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு வந்தால், அவர்களை உளப்பூர்வமாக வரவேற்பேன். காந்தி உயிரோடு இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். பாடுபட்டு உருவாக்கிய தேசத்தை ஊழலிலும், ஏழ்மையிலும் விட்டுச் செல்லவா காந்தி விரும்பியிருப்பார்.
இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகு ஒருவேளை நேதாஜி தலைமையில் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தால் தற்போதைய ஆட்சி அவலங்களைப் போல் இருந்திருக்காது. இந்தியா விடுதலை பெறும்போது நேதாஜி தலைமையில் சர்வாதிகார ஆட்சி முறை ஐந்து ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்" என்றார்.
இதையும் படிங்க: மகாத்மாவின் தனிச்செயலர் வி.கல்யாணம் காலமானார்