மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐயின் சார்பாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து குற்றப் பத்திரிகை நேற்று (அக்டோபர் 26) தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது கசிந்துள்ள நிலையில், அது குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை என நான் கருதுகிறேன். காரணம் அந்த அறிக்கையின் இறுதியில் சிபிஐ மேலும் சில சாட்சிகளை விசாரிக்கவும் அறிக்கைகளை பெறவும் கால அவகாசம் கோரியுள்ளது. அது நியாயமானது. கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தங்களது பணியை தொடங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைக்காக வந்த அலுவலர்களில் சிலர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு பொய் வழக்காகும். சதியின் அடிப்படையில் அங்குள்ள காவலர்களால் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் அந்த காவல் நிலையத்தில் தொடர் சித்திரவதை நிகழ்ந்துள்ளது என்பதையெல்லாம் விளக்குகின்ற ஒரு அறிக்கையாக இந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை குற்றப்பத்திரிகையில் சாட்சியமாகக் காட்டி உள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் ஆடைகளில் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள், காவலர்களின் லத்திகள், காவல் நிலையத்தின் சில பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் இவையெல்லாம் சிபிஐ ஒரு முடிவுக்கு வர மத்திய தடய அறிவியல் ஆய்வகம் உதவி புரிந்துள்ளது. மூலக்கூறு ஆய்வுகளும் சிபிஐயின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஜெயராஜ், பெனிக்ஸ் ரத்த மாதிரிகள் ஒத்துப்போவதாக சிபிஐ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மெடிக்கல் சார்ந்த பல்துறை வல்லுநர்களை கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி, டாக்டர் வெண்ணிலா கொடுத்த அறிக்கை, கிளைச் சிறையில் வழங்கப்பட்ட அறிக்கை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சான்றிதழ், உடற்கூறு ஆய்வு அறிக்கை ஆகிய அனைத்திலும் வேறுபட்ட தன்மைகள் இருந்ததனால் இந்த குழு அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர் வெண்ணிலா கொடுத்த அறிக்கையில் முரண்பாடுகள் இருக்கின்ற காரணத்தால் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உண்டு.
மேலும், இந்த குற்றப்பத்திரிகையில், சாத்தான்குளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவலர்கள் அழைத்து சென்றது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட வாகனம், அதன் உரிமையாளர், அதிலிருந்த ரத்தக் கறைகள் ஆகியவை குறித்த எந்த விவரமும் இடம்பெறவில்லை. நீதித்துறை நடுவர் குறித்த எந்த தகவலும் இதில் இடம்பெறவில்லை. அதேபோன்று அந்த மாவட்டத்தில் பணிபுரிந்த உயர் காவல்துறை அலுவலர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாதா என்ன...? அது குறித்தும் இந்த அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவ தினத்தன்றும் அதற்குப் பிறகும் வந்த தொலைபேசி அழைப்புகள் எதுவும் இந்த அறிக்கையில் இடம் பெறாதது வேதனை தருகிறது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சிபிஐயின் இரண்டாம் கட்ட தகவல் அறிக்கையில் இடம் பெறும் என நம்புகிறேன். சாத்தான்குளம் சம்பவத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகப் பரவலான கருத்துகள் உருவாகி உள்ளதால், இந்த குற்றப்பத்திரிகையில் முழுமையான தகவல்கள் வெளியாக வேண்டும். இது கண்டிப்பாக ரகசியமான முறையில் இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால், தொடர்புள்ள சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் பகிரங்கமாகவே கொல்லப்பட்டுள்ளனர். ஆகையால் வெளியிடப்படும் அறிக்கையும் பகிரங்கமாக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமை குறித்து பேசப்படுகின்ற இந்திய தேசத்தில் உண்மைகளை மறைப்பது மிகவும் தவறு. இவை அனைத்தையும் உயர் நீதிமன்றம் நிச்சயம் கண்காணிக்கும் என்ற நம்பிக்கை என்னைப் போன்றவர்களுக்கு உண்டு. இதனை பகிரங்கமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இல்லாவிட்டால் தவறான தகவல்கள் சென்றடைய வாய்ப்பு ஏற்பட்டு விடும். சரியான தகவல்கள் மக்களை சென்றடைந்தால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என நம்புகிறேன்.
அந்த பொறுப்புடன் இதைப்பற்றி நான் பேசுகிறேனே தவிர, நீதியில் தலையீடு செய்வதற்காக சொல்லப்படுகின்ற ஒரு விஷயம் அல்ல. தற்போது, வெளியாகியுள்ள அறிக்கையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஆவது ஏ பிரிவின் அடிப்படையில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காகத்தான் எனது கருத்தை தெரிவிக்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தியுள்ளது'