மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "ஆன்லைன் ரம்மியை தடைசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்பதால், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை.
அரசு அதிக முக்கியத்துவத்துடன் இந்த விவகாரத்தை கையாள்கிறது. சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது. ஆகவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், நாள்தோறும் பல உயிர்கள் பலியாகின்றன. பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்கின்றனர். சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆகவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்வதற்கு, அது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்பட உள்ளதா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து அரசுத் தரப்பில், பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சூதாட்டத்திற்கு வருகிறது தடை!