சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், மதுரையைச் வழக்குரைஞர் கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்," மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர் நியமனத்திற்கு விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றனர். விரைவில், அரசு வழக்குரைஞர்கள் பட்டியல் வெளியிடப்படவுள்ளன.
ஆனால், இந்தப் பட்டியலில் தகுதி வாய்ந்த வழக்குரைஞர்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டால் நீதிமன்ற பணிகள் பாதிக்கும். மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர் நியமனத்தில், உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் நியமனத்திற்கு வழங்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு நியமன விதிகளின்படியும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படியும், தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட வல்லுநர்கள் குழு அமைத்து, பி.பி., ஏ.பி.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான அரசு வழக்குரைஞர்கள் நியமனம் தொடர்பாக, 2017 ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞர்கள் நியமன விதிமுறைபடி, மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின் அவர்கள் பிறந்த தேதி, அனுபவம், தகுதி உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுப்பதற்கான தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என, மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர்,"இதுதொடர்பாக அறிவிப்பானை வெளியிடப்படும். அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞர்கள் சங்க அலுவலகத்தில் விவரங்கள் ஒட்டப்படும். கடந்த 1961 ஆம் ஆண்டு வழிமுறைகள் படி நியமனம் நடைபெற உள்ளது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் திறமையான, தகுதியான நபர்களை அரசு வழக்குரைஞராக நியமனம் செய்ய வேண்டும் என, மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் எந்த விதிமுறைகள், வழிகாட்டுதல்படி அரசு வழக்குரைஞர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து, தமிழ்நாடு உள்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.