மதுரை சிவானந்தா சாலையைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது கணவர் சரவணனுக்கும் அவரது சகோதரருக்கும் தொழிலில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதில், அவரின் சகோதரர் என்னை மிரட்டி எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நான் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தேன். இந்த புகார் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், என் கணவரின் சகோதரரின் புகாரின் பேரில் திலகர் திடல் காவல் துறையினர் கடந்த ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணியளவில் என்னைக் கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு காவல்துறையினர் என்னை மிரட்டி வழக்கை திரும்பப் பெறுமாறு கூறினார். அதுமட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் பேசியும், கடுமையாக என்னைத் தாக்கவும் செய்தனர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தவிடவேண்டுமெனக் கூறியிருந்தார்".
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அரசுத் தரப்பில் வழங்க வேண்டுமெனவும், தொடர்புடைய காவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் படிங்க: கொலை வழக்கிற்கு இதுதான் தண்டனையா? - உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி