ராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், பிற பகுதிகளிலும் கடையர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக கடையர் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இணைப்பது குறித்து சில அரசியல் தலைவர்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். அது குறித்து பரிசீலனை செய்வதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ்வாறு கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்து வரும் மக்களை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்க்கக் கூடாது என தொடர்ச்சியாக கடையர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நீண்ட நெடிய வரலாற்றில் கடையர் சமூகம் என்பது மிகவும் தொன்மையான, பழம்பெருமை வாய்ந்த மூத்த குடி என பல்வேறு வரலாற்று அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு கல்வெட்டு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில், கடையர் சமூக மக்களை தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் சேர்ப்பது தொன்மையை வேரறுக்கும் செயலாக அமைந்துவிடும். ஆகவே, கடையர் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தோடு இணைக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் என அரசானை வெளியிட வேண்டும் - ஏழு சமுதாய உட்பிரிவினர் போராட்டம்