தென்காசியைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்டத்திற்கான கட்டமைப்பு கட்டுமான பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாலங்கள் போன்ற வேலைக்கு பல்வேறு அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடும் பணி நடைபெற்றது. முறைப்படி கடந்த மே மாதம் 13 வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் 9 பணிகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 4 பணிகளையும் பணி ஆணை பெறாமல் ஒரே தனியார் நிறுவனம் எடுத்து வேலைகளை செய்து வருகிறது.
4 பணிகளுக்கு பணி ஆணை பெறாமல் 60 முதல் 75% பணிகளை தனியார் நிறுவனம் முடித்திருக்கும் நிலையில், தற்போது இந்த 4 பணிகளுக்கும் செப்டம்பர் 29ல் புதிதாக டெண்டர்
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படாமல் மீண்டும் புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. இது சட்ட விரோதமானது.
இது குறித்து புகைப்படத்துடன் அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு அலுவலர்களால் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஆகவே, 4 பணிகளுக்கும் செப்டம்பர் 29ல் புதிதாக வெளியிட்ட டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்