மதுரை: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குமிளங்குளம் ஊராட்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டடத்திற்கு வரி விதித்து ஊராட்சி மன்ற தலைவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது விதிமுறைகளுக்கு எதிரானது ஊராட்சி மன்ற தலைவரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட பிஎஸ்என்எல் (BSNL) மேலாளர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், BSNL மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம். மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டடங்களுக்கு மாநில உள்ளாட்சி நிர்வாகம் வரி விதிக்க முடியாது. இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பதால் மாநில உள்ளாட்டசி அமைப்புகளால் வரி விதிக்க முடியாது. பிஎஸ்என்எல் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும், மத்திய அரசிற்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படுவதால் வரி விதிக்க முடியாது. எதிர்காலத்தில் அந்த இடமோ, கட்டடமோ பிஎஸ்என்எல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பெயர் மாற்றப்பட்டால் ஊராட்சி நிர்வாகம் வரி விதிக்கலாம் என கூறி ஊராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு