ராமநாதபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளர் பாலு என்பவர், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியதாவது;
நான் ராமநாதபுரம் நகராட்சியில் 32 வருடங்களாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான, முகக்கவசம், கிருமிநாசினி, ஷூ உள்ளிட்ட எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. நான், துப்புரவு பணியாளர்களின் சங்க தலைவராக இருப்பதால், இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டேன். தொடர்ந்து கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இதைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் அதாவது, ஏப்ரல் 28ஆம் தேதியன்று என்னை உள்நோக்கத்துடன் ராமநாதபுரம் நகராட்சியிலிருந்து, உசிலம்பட்டி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்தனர். துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்குவது நகராட்சியின் கடமை. இது குறித்து கேள்வி எழுப்பியதால் உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் எனக்கு 55 வயது ஆவதால் இந்த நிலையில் குடும்பத்தை ராமநாதபுரத்திலிருந்து உசிலம்பட்டிக்கு மாற்றுவது சிரமம்.
எனவே, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்து ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (மே 26) நீதிபதி நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூய்மைப் பணியாளர் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், ராமநாபுரம் நகராட்சி ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் பணியிடமாற்றம்