மதுரை: நெல்லை, சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, "எனது மகன் மகிஷ், கடந்த 2014ஆம் ஆண்டு சங்கரன்கோவில் கூலிதீவு அரசு நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி கணித ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தாக்கியதில், எனது மகனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதனால் கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி கணித ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர், எனது மகனின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும்; புகார் அளிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் நான் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் கூறியது போல் எந்த மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது மகனின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி கும்ரேஷ் பாபு, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மாணவனின் இடது கண் பார்வையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கூகுள் தேடலில் ஹிட் அடித்த ஃபிஃபா இறுதிப்போட்டி - ட்ராஃபிக்கால் ஸ்தம்பித்த கூகுள்!