மதுரை: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமண பதிவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை நாடியிருந்தார். அதில் தனது உறவினர் ஒருவர் கல்லூரி படிக்கும் போது தன்னை கட்டாய திருமணம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த பெண் தனது மனுவில் வகுப்பறையில் இருந்த தன்னை, அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் என கூறி அழைத்துச் சென்றதாகவும், ஆனால் பதிவுத்துறை அலுவலகத்திற்கு தான் கடத்திச் செல்லப்பட்டதாக புகார் கூறியுள்ளார். தனது பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி திருமணம் நடைபெற்றதாகவும், திருமண பதிவுச் சான்றில், வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றதாகவும் கூறியுள்ளார்.
விருப்பமில்லாமல் மிரட்டியும் , வற்புறுத்தியும் நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு பதிவு திருமணம் சட்டத்தின் படி முஸ்லிம் தம்பதிகளின் விண்ணப்பத்தில் ஜமாத் உடைய பெயர் மற்றும் அதன் முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தில் இரண்டு தம்பதியினருக்கு இடையே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். இவை அனைத்தும் சரிவர பின்பற்றியே திருமணம் பதிவு செய்ய இயலும். எந்த ஒரு மதத்தினை பின்பற்றக் கூடியவர்களாக இருந்தாலும் அவரவர் மதத்திற்குரிய முறையில் திருமணம் நடைபெற்ற பிறகு பத்திரப்பதிவு திருமணம் நடத்த முடியும்.
அந்தந்த மதத்திற்கான திருமண முறைகளை பின்பற்றி திருமணம் நடைபெறாமல் நேரடியாக பத்திரப்பதிவு துறையில் திருமணம் பதிவு செய்ய முடியாது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை குறிப்பிட்ட ஜமாத்தில் அனுமதி பெற்று அவர்களுடைய முறையின்படி திருமணம் செய்யப்பட்டு அதன் பின்னர் தான் பதிவு செய்ய முடியும்.
திருமணம் செய்யும் ஜோடிகள் அந்தந்த மதத்திற்கான சட்ட திட்டங்களை பின்பற்றி பதிவு திருமணம் செய்ய வருகிறார்களா? என்பது குறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை இஸ்லாமியர் சட்டத்திட்ட நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் நடைபெறவில்லை.
எனவே, பத்திரப்பதிவுத்துறையில் திருமண பதிவு செய்யப்பட்ட சான்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் இதற்கான துணை ஆவணங்கள் உட்பட அனைத்து ஆவணங்களில் இருந்தும் திருமணத்திற்கான பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.