மதுரை: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியிலுள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று (அக். 29) காலை நடைபெற்ற மதவழிபாட்டு பொது நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் குண்டு வெடிப்பில் 36க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவிலும், 52 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அம்மாநில போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் எதிரொலியாக, தமிழக - கேரள எல்லைப்பகுதியான கோவையில் 13 சோதனை சாவடிகளில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கோவையில் உள்ள முக்கிய தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: தென்னிந்திய வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்கள் யார்? - தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!
மேலும் தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் வளாகம், பார்சல் சர்வீஸ், ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் அதிநவீன கருவிகளுடனும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரயில் நிலையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் மேம்பால கட்டுமானப் பணிகள் தொடக்கம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். இதனை அடுத்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டை வழித்தட ரயில்களில் புது மாற்றம் - தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ஷாக் அறிவிப்பு!