மதுரை: தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தில் செல்ஃபோன் டவர் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கீழப்பாவூர் கிராமத்தின் மையப்பகுதியில், தனியார் நிறுவனத்தின் செல்ஃபோன் டவர் அமைக்க முதற்கட்ட பணி நடைபெற்றுவருகிறது.
செல்ஃபோன் டவர் அமையவிருக்கும் இடத்திற்கு அருகே அங்கன்வாடி மையம், கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது. செல்ஃபோன் டவர் அமைப்பதற்காக ராட்சத ஜெனரேட்டர் வைக்கப்படவுள்ளது. இதிலிருந்து அதிகப்படியான புகை வெளியேறி பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடும் .
தொலைத் தொடர்பு சட்டத்தின்படி, குடியிருப்பு பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் செல்ஃபோன் டவர் அமைக்கவேண்டும் என்பது விதி. மேலும், டவர் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிலரிடம் ஒப்புதல் பெறவேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் முதல்கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, செல்ஃபோன் டவர் அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, டவர் அமைக்கும் பணிக்கு முழுமையான தடை விதித்து உத்தரவிடவேண்டும்" என கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி, ஆகியோர் அமர்வு, தென்காசி மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள், கிராம மக்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி செல்ஃபோன் டவர் அமைப்பது குறித்து முடிவெடுக்கவேண்டும். அதுவரை செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் முற்றுகை முயற்சி