மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் உயர் நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “மதுரையில் அரசு தலைமை மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் ஏழை , எளிய பொது மக்களுக்கு உயிர்காக்கும் அரும் சேவையை செய்து வருகிறது.
ஆனால் இந்த மருத்துவமனைகளில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் இணைய தள வசதிகள் உள்ளன. இந்த இணைய தளத்தில், அனைத்து மருத்துவ மனைகளிலும், என்னென்ன வசதிகள் உள்ளன. அந்த அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் விபரம், அவர்கள் எந்த மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கிறார்கள், எப்போது சென்றால் இவர்களை சந்திக்கலாம் என்ற விபரத்தை பதிவேற்றினால், பொதுமக்கள் சிகிச்சை பெற வசதியாக இருக்கும்.
இதேபோல், மருத்துவமனைகளில் தினசரி வந்து செல்லும் வெளிநோயாளிகள் விபரங்களை வெளியிட வேண்டும். அதே போல மருத்துவமனைகளில் அளிக்கப்படும் முழு உடல் பரிசோதனையை மேம்படுத்த வேண்டும். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் என்னென்ன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை