கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பித்தேன். கடந்த ஜனவரி 12இல் எழுத்துத்தேர்வு நடந்தது. முதல்கட்டமாக வெளியான கீ ஆன்சர்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. இதனிடையே மார்ச்சில் வெளியான இறுதி கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. அதன்படி, எனக்கு 48 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதனால், எனக்கான வாய்ப்பு பறிபோனது.
கடந்த 1947க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால், 4 முறை பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது என்பதே சரியான விடை என குறிப்பிட்டு மதிப்பெண் வழங்கியுள்ளனர். பண மதிப்பு குறைப்பும், மதிப்பிழப்பும் வெவ்வேறானது. சரியாக 3 முறை என பதிலளித்த பலருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. எனவே, சரியான மதிப்பெண் அளித்த என்னை, அடுத்தக் கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், மனுவுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர், செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: காவலர்களின் பாதுகாப்பு முக்கியம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை