மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்புநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் ஆறு, ஏரி, குளங்களை, ஆழப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
குடிமராமத்துப் பணியின்கீழ் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்காக 2019ஆம் ஆண்டு 110 விதியின்கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழ்நாட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே காரணம் ஆகும். ஆகவே தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இது குறித்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறைத் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா உறுதி