திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினராக உள்ளேன். நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை விமரிசையாக கொண்டாடும் வகையில் திண்டுக்கல் சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி திரையரங்க வளாகத்தில் நடிகர் விஜய்யின் மெழுகு சிலை வைத்தும் மேளதாளங்கள் வாசித்து கொண்டாடவும் முடிவுசெய்தோம். இதற்கு திரையரங்கு உரிமையாளரும் எங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.
அக்டோபர் 24 முதல் 27 வரை அமைதியான முறையில் இவ்வாறு கொண்டாட முடிவு செய்துள்ளோம். திரையரங்க வளாகத்தில் உள்ளேயே கொண்டாட முடிவு செய்திருப்பதால், இதில் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நிகழ்வு நடைபெறாது.
இதற்கு அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்டோபர் 22இல் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆகவே, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி திரையரங்கு வளாகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை அமைக்கவும் மேளதாளங்கள் வாசித்துக் கொண்டாடவும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திண்டுக்கல் ஸ்ரீ லட்சுமி திரையரங்கின் உரிமையாளரையும் வழக்கின் எதிர் மனுதாரராக சேர்க்கக்கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் வாசிங்க: மகளுக்காக நீதிமன்றத்தை அணுகிய தாய்: வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு!