தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையைச் சேர்ந்த சின்னசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எங்கள் தேனி மாவட்டம் முழுவதும் பெரியார், வைகை நீர்ப்பாசனத்தையே நம்பியே விவசாயம் செய்துவருகிறோம். வறட்சியான நேரங்களில் எங்கள் கிராமப்பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீரைத் தேக்கி, விவசாயம், குடிநீர் தேவைகள் உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்துகொள்கிறோம்.
2017, 18 ஆகிய ஆண்டுகளில் எங்களது மயிலாடும்பாறை பெரியகுளம் கண்மாய் உட்பட அனைத்து கண்மாய்களும் அரசின் உதவியோடு தூர் வாரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் குடிமராமத்து என்ற பெயரில், நீர் நிலைகளை தூர்வாருகிறோம் என்ற பெயரில் எங்களது மாவட்டத்தில் உள்ள இயற்கை மண் வளங்களையும், மண் வளங்களையும் கொள்ளையக்கின்றனர். இதற்கு அரசு அலுவலர்களும் உடந்தையாக உள்ளனர்.
மேலும் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் (சுரேந்திரன்) இது போன்ற கொள்ளையடிக்கும் அரசியல்வாதிக்கும், அரசு அலுவலர்களுக்கும் உடந்தையாக உள்ளார். எங்கள் மாவட்டத்தில் பெரும்பாலான இயற்கை வளங்களைக் கொள்ளையடித்த நிலையில், எங்கள் ஊரான மயிலாடும்பாறை பெரியகுளத்திலும், சிலர் இந்த அரசியல்வாதிகளின் துணையோடு மண்ணை அள்ள முயற்சி செய்கின்றனர்.
மேலும், கண்மாய்க்குள் உள்ள சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலான ஆயிரக்கணக்கான உலகு மரங்கள், தென்னை மரங்களையும் வெட்டிக் கடத்த முயற்சி செய்கின்றனர். பொதுமக்களாகிய நாங்கள் இதனைத் தடுத்துவருகின்றோம். இருப்பினும் காவல் துறையினரின் துணையோடு இந்த மரங்களை வெட்டிக் கடத்த முயற்சிசெய்கின்றனர். எனவே இதனை தடுத்து நிறுத்த தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.