ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சிவகங்கை மாவட்டம் கோவிலூர் பகுதியில் ரசாயன தொழிற்சாலை இயங்கிவருகிறது. அதிலிருந்து வெளியேறும் வாயு, மற்றும் கழிவுநீரால் சுற்றுப்புற சூழல் பெருமளவில் மாசடைகிறது.
இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆஸ்துமா, சுவாச கோளாறு, எலும்பு சார்ந்த நோய்கள், நுரையீரல் பிரச்னை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதோடு இந்த கழிவு நீரால் நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளது. மாசடைந்த நீரை குடிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கரு கலையும் அபாயமும் ஏற்படுகிறது.
இந்தத் தொழிற்சாலையை மூடக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தொழிற்சாலையை மூட வலியுறுத்தி ஜனவரி மூன்றாம் தேதி முதல் கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆனால் குன்றக்குடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். எனவே குன்றக்குடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கோவிலூர் பேருந்து நிலையம் முன்பாக ஜனவரி மூன்றாம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்," ஆலையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஆகவே, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அவசியம் இல்லை, என்ற அடிப்படையிலேயே அனுமதி மறுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: கோலம் விவகாரம்: சென்னை காவல் ஆணையர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்