மதுரையைச் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்க்கு குவைத்தில் பணியாற்றி வரும் ஜெரோ என்பவரிடமிருந்து வாட்ஸ்அப் கால் மூலமாக அழைப்பு வந்தது.
அதில் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள ஜல்லிக்கட்டு காளைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக அவரது தாயாரிடம் பேசவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மருத்துவர் மெரில்ராஜ், மூவரையும் கான்ஃப்ரன்ஸ் கால் மூலமாக அழைத்து, ஜல்லிக்கட்டு காளையின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார். பிறகு அவரது ஆலோசனையின் பேரில் காளைக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த சிகிச்சை கான்ஃப்ரன்ஸ் கால் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜல்லிக்கட்டு காளை நலமுடன் உள்ளதாக மருத்துவர் மெரில்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை என்னை தொடர்பு கொண்ட ஜெரோ என்பவர் தற்போது குவைத்தில் ஓட்டுநராகப் பணி செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் உள்ள சூரம்பட்டி கிராமம்.
அங்கு அவர் வளர்த்துவரும் ஜல்லிக்கட்டு காளை திடீரெனக் காய்ச்சல் அதிகமாகி, பின்னங்கால்கள் இரண்டும் செயலிழந்து விட்டன. இதுகுறித்து தகவல் தெரிவித்தவுடன் கான்ஃபிரன்ஸ் கால் மூலமாக குவைத்திலிருந்து ஜெரோ, சிவகங்கையில் உள்ள அவரது தாயார் மற்றும் காளையுடன், மதுரையிலிருந்து நானும் இணைந்து வீடியோ கால் மூலமாகவே காளையை பார்த்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினேன். தேவையான மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்தேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை மீண்டும் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது காளை மிக இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளது.
சமூக தகவல் தொடர்புகள் எந்த அளவுக்கு மருத்துவ சேவைக்கு உறுதுணையாக உள்ளன என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு என்றார்.
தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிகிச்சைக்கு ஒத்துழைக்காத குரங்கு குட்டியின் தேவையறிந்த வனத்துறையினர்!