மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிற்கு எதிராக 34ஆவது நாளாக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தி அரசு சார்பில் மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளுக்கு அரசு சம்மதம் தெரிவிக்காத நிலையில், போராட்டத்தைத் தொடர்வதாகக் கூறி போராட்டக் குழுவினர் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிஜாம் அலி, ”அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க சம்மதித்தோம். போராட்டக் களத்தில் உள்ள பந்தலை அகற்ற வேண்டும் என்ற அரசின் நிபந்தனையை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.
தற்போது போராட்டக் களத்தை அகற்றினால் மீண்டும் போராட்டத்தை நடத்த விடமாட்டார்கள். அரசு போராட்டத்தை நிரந்தரமாக நிறுத்த முயற்சி செய்வதால் போராட்டத்தைத் தொடர முடிவுசெய்துள்ளோம். கூட்டத்திலிருந்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாங்கள் மருத்துவக் குழுவை ஏற்படுத்தவுள்ளோம். அரசின் பிடிவாதம் காரணமாகவே போராட்டம் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடலூரில் இஸ்லாமியர்கள் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம்