கபடி போட்டியை நினைவுக்கூறும் வகையில், மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் கற்சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான இடத்தைத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் ரவுண்டானாவில் கட்டி முடிக்கப்பட்ட பீடம் மீது நின்றவாறே பேசினார். அப்போது, “மதுரையின் முக்கியச் சந்திப்புகளில், தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கபடி வீரர்கள் அதிகம் உள்ள செல்லூர் பகுதியில், கபடி வீரர்களின் சிலை அமைப்பதில் பெருமையடைகிறோம்.
கபடி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மதுரையின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இன்னும் திறப்பு விழா காணாத புதிய ரவுண்டானாவில் கட்டி முடிக்கப்பட்ட பீடம் மீது நின்று அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென டைல்ஸ் கற்கள் உடைந்து பள்ளமானது, அதில் அமைச்சர் உடன் நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தனர். பின்னர், அருகிலிருந்தவர்கள் பள்ளத்தில் விழுந்தவர்களை லேசான காயங்களுடன் மீட்டனர்.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்தில் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மின் கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வு தமிழில் எழுத நடவடிக்கை’ - அமைச்சர் தங்கமணி