மதுரை, திருமங்கலம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முத்துராலிங்கம். நேற்று (மார்ச்.20) அதிமுகவிலிருந்து விலகி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் முத்துராமலிங்கம். எதிர்வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட, மூன்று (திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு) தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட அவர் வாய்ப்பு கோரியிருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு முன்னர் நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலிலும் முத்துராமலிங்கத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த முத்துராமலிங்கம், திமுகவில் இணைய முடிவெடுத்தார்.
இந்நிலையில், திருமங்கலம் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்துவிட்டு ஸ்டாலின் சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், ஆகியோர் முன்னிலையில் முத்துராமலிங்கம் தன் மகன் மு.கருணாநிதியுடன் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கடந்த 1996-2001 தேர்தலில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதிமுகவில் இணைந்ததால் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு திருமங்கலம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், மீண்டும் அதே திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை (2011-2016) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருமங்கலம் தொகுதி, புறநகர் மாவட்டச் செயலர் பதவி வகித்து வந்த முத்துராமலிங்கத்திற்கு பதிலாக, கடந்த 2016ஆம் ஆண்டில் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. தேர்தலுக்குப் பின் மாவட்டச் செயலர் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை ஆதரித்ததால் அதிமுகவில் இருந்து முத்துராமலிங்கம் நீக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தின் இணைப்பிற்குப் பின் முத்துராமலிங்கத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’ஸ்டாலின்தான் வராரு... மக்களெல்லாம் உஷாரு’: பாட்டாகவே பாடிய விந்தியா