மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "இரண்டாவது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போதுமான ஒதுக்கீட்டை உடனடியாக செய்ய வேண்டும். தடுப்பூசி மையங்களில் அதிக அளவு பணியாளர்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்.
மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன. இதில், திருமங்கலம் தொகுதி 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள், இரண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளடக்கிய மிகப்பெரிய சட்டப்பேரவை தொகுதியாகும்.
கிராமங்களில் அடிப்படை தேவைகளை மக்களின் கோரிக்கை அடிப்படையில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளை உருவாக்க அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை.
ஆனால், பாரபட்சமாக திமுக செயல்பட்டதாக பத்திரிகையில் வந்த செய்தி ஆச்சரியமாக உள்ளது. மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை தற்போதைய அரசிடம் நாங்கள் முன்வைக்கிறோம். அலுவலர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அதனை குறையாக ஆளும் கட்சியினர் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.
பேரிடர் காலங்களில் மக்களைக் காக்கும் பணிகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் உள்ள வேறுபாட்டை அமைச்சர் மூர்த்தி நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் நான் தரும் விளக்கங்களை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.