மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த குரங்குகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகளாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவும்போது ஏற்படும் காயங்களாலும் அவ்வப்போது அவதியுற்றுவருகின்றன.
இவ்வாறு அவதியுறும் குரங்குகளைக் கண்டறிந்து, வனத்துறையினர் அவற்றிற்கு முறையான சிகிச்சையளித்து, மீண்டும் அவை வசிக்கும் இடத்திற்கே சென்று விட்டுவருவது வழக்கம்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் குரங்கு குட்டி ஒன்று அடிபட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குட்டியை மீட்டு வனத்துறையினர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது, தாயைப் பிரிந்த குட்டி, சிகிச்சைக்கு ஒத்துழைப்புத் தராமலும், எவ்வித உணவுப் பொருள்களையும் எடுத்துக்கொள்ளாமல் அடம் பிடித்துவந்தது. தாயை பிரிந்த ஏக்கத்தில் குரங்கு குட்டி இவ்வாறு நடந்துகொள்வதை அறிந்த வனத்துறையினர், குட்டியை அதன் வசிப்பிடத்திற்கே கொண்டு சென்று, தாயுடன் சேர்த்தனர்.
பின்னர், தாயுடன் இணைந்த குரங்கு குட்டி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், உணவினை எடுத்துவருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்துள்ள குரங்கு குட்டியை தனியாக கூண்டில் அடைத்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குரங்கை தூக்கில் தொங்கவிட்டு சித்ரவதைசெய்து கொன்ற மூவர் கைது