மதுரை: இந்தியா முழுவதும் இன்று (பிப்.18) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டின் அனைத்து சிவன் கோயில்களிலும் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனிடையே நாட்டின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, கோவை ஈஷா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக இன்று காலை 11.50 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு வருகிறார். இதனையடுத்து பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள அன்னதான நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆகாய மார்க்கமாக குடியரசுத் தலைவர் கோவை செல்கிறார்.
பின்னர் அங்குள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். அடுத்ததாக நாளை (பிப்.19) கோவையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் 2 நாள் தமிழ்நாடு பயணத்தை ஒட்டி, இரண்டு மாவட்டங்களிலும் பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மதுரை மாநகர் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் வெளி வீதிகள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அம்மன் சன்னதி பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, மதுரை மாநகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்!