மதுரை: கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொண்ணு என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் காவ்யா, கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். என் கணவர் எங்களை விட்டுச் சென்ற நிலையில் 14 ஆண்டுகளாக நானும் எனது மகளும் எனது தந்தையின் பராமரிப்பில் வசித்து வருகிறோம்.
இந்நிலையில் எனது மகளைப் பள்ளியில் சேர்த்த போது எனது பெயரின் முதல் எழுத்தை அவளது INITIALஆகப் பதிவு செய்தோம். ஆதார் அட்டையிலும் எனது பெயரின் முதல் எழுத்தே எனது மகளுக்கு INITIAL ஆக வழங்கியுள்ளேன். எனது மகளும் அவரது தந்தையின் பெயரை முதலெழுத்தாகப் பயன்படுத்த விரும்பவில்லை.
எனது பெயரின் முதல் எழுத்தை INITIALஆகப் பயன்படுத்தப் பள்ளி நிர்வாகம் அதை ஏற்க இயலாது எனக் கூறி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் போதும் இதே பிரச்னை எழக்கூடும் என்றும், எனவே கணவரின் பெயரை மகளுக்கு INITIALஆகக் குறிப்பிட அறிவுறுத்தினர்.
ஆகவே, எனது பெயரின் முதல் எழுத்தை எனது மகளின் INITIALஆகப் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாகர்கோவில் பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு