மதுரையில் தீபாவளியன்று தனியார் ஜவுளிகடையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவர் உயிரிழந்தார்.
இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி (29) கணவர் இறப்பிற்குப் பிறகும் பாறைப்பட்டியிலுள்ள தனது கனவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிவராஜ் மறைவிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தது. அந்த பணத்தை பிரிப்பதில் அங்கையற்கண்ணிக்கும் அவரது மாமனார் வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கையர்க்கன்னி மதுரை கீழகுயில்குடி சீனிவாசா காலனியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கணவன் இறப்பு, பணம் விவகாரம் உள்ளிட்டவைகளால் கடந்த இரு தினங்களாக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கையர்கன்னி இன்று (டிச.21) காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அங்கையர்கன்னியை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர், அங்கயற்கண்ணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ”அண்மையில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது” - உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தார் சோகம்!