மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைப் பகுதியில் தேங்கும் குப்பைகளை உசிலம்பட்டி அரசு நூலக கட்டடத்தின் அருகே கடை வியாபாரிகள் கொட்டுவது வழக்கமாக உள்ளது. இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள மரத்திலும் பரவும் சூழல் உள்ளது. மேலும் துர்நாற்றத்தால் நூலகத்திற்கு படிக்கவரும் மாணவ மாணவிகள் மூச்சுவிட சிரமப்படும் அவலமும் உள்ளது.
இந்நிலையில், மே 20ஆம் தேதி குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் குப்பையின் அருகே இருந்த மரத்தின் மீதும் தீ பரவி மரம் விழும் சூழலில் மரத்தின் அருகே செல்லும் மின் வயர் அறுந்து பெரும் விபத்து ஏற்படும் என அஞ்சிய பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைவாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும்விபத்து தடுக்கப்பட்டது. மேலும் குப்பையை நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நூலகத்திற்கு வரும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.