மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவான 227இல் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து திடீர் நகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பணியாளர்கள் தீயை அணைத்தனர். இதனால் வார்டு முழுவதும் பரவிய புகை மூட்டம் காரணமாக நோயாளிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்குமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வார்டு எண் 228 அருகே உள்ள சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ள தலையணை, போர்வை உள்ளிட்டவற்றில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. சிறிய அளவிலான நெருப்பு அங்கே புகை மூட்டத்தை உருவாக்கியதாகவும், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய தீயணைப்புத் துறையின் தென் மண்டல துணை இயக்குநர் சரவண குமார், இந்த தீ விபத்தால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகவும், நோயாளிகள் அல்லது நோயாளிகளை பார்க்கவந்த யாரோ ஒருவர் போட்டுவிட்டுச் சென்ற நெருப்பு போன்ற பொருளால்தான் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
தற்போதைய நிலையில் தற்காலிகமாக ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைக்கு அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனங்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதால் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.