மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அவனியாபுரத்தில் அயன் பாப்பாக்குடி கண்மாய் அமைந்துள்ளது . இருபது ஏக்கரில் அமைந்துள்ள இக்கண்மாய் அவனியாபுரம் வெள்ளக்கல் பெருங்குடி, அயன் பாப்பாக்குடி நிலையூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் ஆதாரமாக விளங்குகிறது.
வருடம் முழுவதும் வற்றாத கண்மாய் ஆக இக்கண்மாய் இருப்பதால் இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் இப்பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிணற்றுப் பாசனம் கண்மாய் பாசனம் உள்ளிட்டவை மூலம் விவசாயம் செழிப்பாக உள்ளது.
ஆனால், தற்பொழுது கண்மாயில் சுற்றிலும் ஆகாயத் தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த ஆகாயத் தாமரை வளர்வதால் நீர்மட்டம் வெகுவாக சரியும் அதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறையும் மேலும் கண்மாயில் சாக்கடை நீரும் ஒருபுறத்தில் கலக்கிறது.
மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் இந்தக் கண்மாயை தூர்வாரி பராமரித்து வந்தால் இப்பகுதி விவசாயத்திற்கும் பொது மக்களுக்கும் நன்கு பயன்படும். எனவே, முன் உதாரணமாகத் திகழும் இந்த கண்மாயை தூர்வாரி ஆகாயத் தாமரையை அகற்றி நன்கு பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்