மதுரை மல்லிகை அதன் தரத்திற்கும் மணத்திற்கும் உலகம் தழுவிய சந்தையைப் பெற்றுத் திகழ்கிறது. புவிசார் குறியீட்டின் காரணமாக பல்வேறு வெளிநாட்டவர்களும் விரும்பி வாங்கக் கூடிய மலர்களில் மதுரை மல்லிகையும் ஒன்று.
மதுரை மாட்டுத்தாவணி அருகேவுள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான மலர்கள் இங்கே விற்பனைக்கு வருகின்றன.
நாளொன்றுக்கு 50 டன்னுக்கும் மேலாக மலர்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது கரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலை பரவலின் காரணமாக தமிழ்நாடு அரசு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் காரணமாக மலர் சந்தையில் மலர்களின் வரத்து குறைந்துள்ளது. பொதுமக்கள் வாங்குவதும் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால், கடந்த சில நாள்களாக மலர்களின் விலையில் மிகக் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை சரிவடைந்துள்ளதால், மல்லிகை விவசாயிகளும், விற்பனையாளர்களும் பெரும் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிக வளாக சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், விளைவிக்கப்பட்ட மல்லிகை பூக்களை விற்பனைக்குக் கொண்டுவர விவசாயிகள் கடும் சிக்கலுக்கு ஆளாகின்றனர். மேலும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக பூக்களின் விலையில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.