இஸ்லாமியர் ஒருவர் தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் இந்துக்களுக்கு எதிரான கருத்துகள் பரப்புரை செய்யப்படுவதாகவும், தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை கோரியும் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
மதுரை ஆத்திக்குளம் கோ.புதூரைச் சேர்ந்த முகமது ஷரீஃப்ன் மகன் முஹைதீன் பாவாஷா என்பவர், மதுரை மாநகர காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மதுரை மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் மாவட்ட பொறுப்பில் உள்ளேன்.
கடந்த ஒரு மாதமாக எனது புகைப்படத்துடன் கூடிய மனீஷா மாலிக் என்ற பெயரில், இந்து மதத்தையும், இந்துக்களையும், தேசியக் கொடியையும் அவமதிக்கும் வகையில், மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் செய்திகளும், படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
எனக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இதனைத் தடுக்கும் வகையில், சைபர் கிரைம் மூலமாக அந்த நபரைக் கண்டறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இம்மனுவைப் பெற்ற காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: 100 ரூபாய்க்கு 15 வகை காய்கறிகள் - வீதி வீதியாக விற்பனை