கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர் கவாய் ஆகியோர் அமர்வு, 2018ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்திற்கான உத்தரவை பின்வாங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எவிடன்ஸ் கதிர், நமது அரசியலைமைப்பு சட்டத்தில் தீண்டாமைக்கெதிரான பல கருத்துகள் இருந்தபோதிலும், இன்றும் பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. எனவே, இனி பட்டியலின மக்கள் புகார் அளித்தாலே முதல் தகவல் அறிக்கை பதியப்படலாம், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிமன்றம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
இருப்பினும், பட்டியலின மக்கள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் காவல்துறை இயக்குநர்களுடன் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் , தமிழ்நாட்டில் 23ஆண்டுகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஏழு விழுக்காட்டினர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். மீதமுள்ள 93 விழுக்காட்டினர் மிகவும் எளிமையாக விடுதலை பெறுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.
வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவுகள் இருந்தும் இதுவரை ஏழு சிறப்பு நீதிமன்றம் மட்டுமே அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக, பதியப்பட்டுள்ள பல வழக்குகள் நிலுவையிலேயே போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அனைத்து மாநிலங்களிலும் வன்கொடுமை தொடர்பான எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஒரு முழுமையான வெள்ளை அறிக்கை பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
பட்டியலின மக்களுக்கான வளர்ச்சிகளில் பங்கெடுக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தும், அதை அவர் நிறைவேற்றத் தவறினால் முதலமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது எனக் கூறினார். மேலும், பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அறுபது விழுக்காடு நிதியை தமிழ்நாடு அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது வெட்கக்கேடான செயல் என அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தமிழின மக்கள் ஒன்றுபட வேண்டும்' - ப.சிதம்பரம் ட்வீட்!