மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பழங்கால கற்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நல்லுத்தேவன்பட்டி கிராமத்தின் மொட்டைமலை பகுதியில் 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது,
இது புலிக்குத்தி நடுகல், கடந்த காலத்தில் இந்தப் பகுதியில் புலிகள் வாழ்ந்து வந்தாகவும், அதை அடக்கி வேட்டையாடும் வீரர்களின் நினைவை போற்றும் வகையில் இதுபோன்ற நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம், மற்ற அனைத்து பகுதியிலும் இரண்டு அல்லது மூன்று அடி உயரத்தில் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சூழலில் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல் 8 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலானது என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் இயங்கி வந்ததற்கான அடையாளமாக மேலும் ஒரு நடுகல்லும், 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நுண் கற்கால கற்கள், இரும்பு கற்கால இரும்பு துகள்கள், வட்டக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் வணிகம் செய்தமைக்கான ஆதாரங்களும், தொழிற்சாலைகள் இயங்கியதற்கான எச்சங்களும் கிடைத்துள்ள சூழலில், இந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதி முழுவதும் முழுமையான அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், உசிலம்பட்டி பகுதியில் கிடைக்கும் பழங்கால பொருள்கள் அனைத்தையும் கொண்டு உசிலம்பட்டி பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... தமிழர்கள் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஆய்வுகள்- மூத்த தொல்லியல் அறிஞர் பேட்டி